மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாந்தன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கைத் தமிழரான சாந்தனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் சாந்தன் இலங்கைத் தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ெராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.
தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். இந்நிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24- ஆம் திகதி உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் சாந்தன். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அப்பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதிக் கடிதத்தை அண்மையில் அனுப்பியது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு அனுமதியளித்தது. சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதிக் கடிதத்தை திருச்சி கலெக்டருக்கு மத்திய அரசு அனுப்பியது.
இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னர் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தனின் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோமா நிலைக்குச் சென்றுள்ள சாந்தனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
The post கல்லீரல் செயலிழந்ததால் சாந்தன் கோமா நிலையில்! appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்