குவைத்தில் பணிபுரியும் 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றையும் அவர் விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் நேற்று (26) நடைபெற்ற குவைத்தின் தேசிய தின நிகழ்வின் போதே அமைச்சர் இந்த விசேட அழைப்பை விடுத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
இலங்கை, குவைத் அரசாங்கத்திற்கிடையில் 2009 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையானது பல வசதிகளை வழங்குகிறது , இதனால் குவைத் நாட்டின் முதலீட்டாளர்கள் அதிகபட்ச பலனைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“இலங்கை,குவைத்துகிடையிலான இராஜதந்திர உறவு ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை இவ்விரு அரசாங்கங்களும் பரஸ்பர நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றன.
அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் மூலம் சலுகைக் கடன்களை வழங்கி இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு குவைத் அரசாங்கம் வழங்கிய ஆதரவானது, இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளதை இங்கு குறிப்பாக நினைவுகூர வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
குவைத்தில் பணிபுரியும் 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளது, இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள குவைத் அரசாங்கத்திற்கு எனது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
குவைத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிபுணர்களை வழங்குவதன் மூலம் குவைத்தின் வளர்ச்சிக்கு பங்காளியாக இருக்க விரும்புகிறோம்.
2020 பெப்ரவரி மாதம் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் குவைத் வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இருநாட்டு வர்த்தகப் பிரதிநிதிகள் மேம்படுத்துவதற்காக வருகை தந்தால், அது பெரும் சாதகமான முடிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.
The post 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு இரண்டாவது தாயகம் குவைத் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்