விண்வெளிக்கு அடுத்த வருடம் செல்லவுள்ள நான்கு இந்தியர்கள்

இந்தியா முதன் முறையாக தனது முழுமையான முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது. ‘ககன்யான்’ என்ற திட்டத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

இந்நிலையில் நேற்று கேரளாவில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கென தனியான விண்வெளி நிலையத்தை உருவாக்க இருக்கின்றன. விண்வெளித் துறையை பொறுத்தவரை ரஷ்யா இந்தியாவுக்கு நெருங்கிய நண்பன் என்பதால் இந்த விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்களை தங்க வைக்க இந்தியாவினால் கோரிக்ைக முன்வைக்க முடியும். ஆனால் அதற்கு இந்தியாவுக்கு முதலில் சில அனுபவங்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்றுதான் சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன்.

இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியில் பறந்தார். அவரை பறக்க வைத்தது சோவியத் ரஷ்யா. எனவே இந்தியா இந்த முறை எந்தவொரு நாட்டினதும் உதவியின்றி தனது வீரர்களை விண்ணில் பறக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது. இதற்காக உருவாக்கப்பட்ட ககன்யான் திட்டம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும். ஏற்கெனவே சந்திரயான் 3, ஆதித்யா எல்-1 உள்ளிட்ட மிஷன்கள் வெற்றியடைந்துள்ள நிலையில், அதே உற்சாகத்தில் ககன்யான் திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று கேரளாவுக்கு வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களை ‘பாரத் மாதா கி ஜே’ எனக்கூறி மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ககன்யான் விண்வெளிப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலேயே அறிமுகப்படுத்தினார். விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா, குரூப் கப்டன் பிரசாந்த் நாயர், குரூப் கப்டன் அங்கத் பிரதாப், குரூப் கப்டன் அஜித் கிருஷ்ணன் ஆகிய இந்த நால்வரும் சிறந்த விமானப்படை அதிகாரிகளாவர்.

ககன்யான் இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றாகும். சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. சந்திரனின் தென்துருவத்தில் வெற்றிகரமாக கடந்த ஆண்டு ரோவரை தரையிறக்கி மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்தது.

The post விண்வெளிக்கு அடுத்த வருடம் செல்லவுள்ள நான்கு இந்தியர்கள் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்