காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம் ஒன்றுக்கு பைடன் நம்பிக்கை: ஹமாஸ் தொடர்ந்து பரிசீலனை

காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம் ஒன்றை எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியபோதும், முன்மொழியப்பட்டிருக்கும் திட்டத்தை ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.

போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்தபோதும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதோடு, ஐந்து மாதங்களை எட்டும் இந்தப் போரில் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30,000ஐ நெருங்கியுள்ளது.

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தில் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக பைடன் குறிப்பிட்டுள்ளார். காசாவில் போரை நிறுத்தி அங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை எட்டும் முயற்சியில் மத்தியஸ்தம் வகிக்கும் அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாருடன் பிரான்ஸ{ம் ஈடுபட்டுள்ளது.

நியூயோக்கில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றிருந்த பைடனிடம், இந்த உடன்படிக்கை எப்போது ஆரம்பிக்கும் என்று கேட்டபோது, “வார இறுதியின் முடிவில் ஆரம்பிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

“நாம் போர் நிறுத்தம் ஒன்றை நெருங்கி இருப்பதாகவும் இன்னும் அதனை அடையவில்லை என்றும் எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் கூறினார். அடுத்த திங்கட்கிழமை நாம் போர் நிறுத்தம் ஒன்றை எட்டலாம் என்பது எனது எதிர்பார்ப்பு” என்று பைடன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வாரம் இடம்பெற்ற அவசர பேச்சுவார்த்தையை அடுத்து முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவு பற்றி ஹமாஸ் தரப்பு இன்னும் உத்தியோகபூர்வ பதிலை அளிக்கவில்லை.

இதில் எதிர்வரும் திங்கட்கிழமை போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படுவது பற்றிய பைடனின் கருத்து முன்கூட்டியதாக உள்ளது என்றும் கள நிலவரத்திற்கு பொருந்துவதாக இல்லை என்றும் ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவத்திற்கு தெரிவித்துள்ளார்.

மறைமுக பேச்சுவார்த்தைகளில் நிரப்பப்பட வேண்டிய பெரிய இடைவெளிகள் இன்னும் இருப்பதாக பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் திட்டம்

இதில் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரையில் ஆறு வாரம் நீடிக்கக்கூடிய போர் நிறுத்தம் ஒன்றுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது ஹமாஸ் பிடியில் இருக்கும் 40 இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் 400 பலஸ்தீனர்களை விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவின் ஓர் அங்கமாக காசா மருத்துவமனைகள் மற்றும் பேக்கரிகள் சீரமைக்கப்படுவதோடு காசாவுக்கு நாளுக்கு 500 வரையான உதவி லொறிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவிருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இராணுவ சேவையில் ஈடுபட முடியுமான வயதுடைய ஆண்கள் தவிர இடம்பெயர்ந்த அனைத்து பலஸ்தீன பொதுமக்களும் வடக்கு காசாவுக்கு திரும்புவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதோடு காசாவின் சனநெரிசல் மிக்க பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் விலகிவிடும் என்றும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தூதுக் குழுக்கள் தொடர்ந்தும் கட்டார் தலைநகர் டோஹாவில் இருந்து வெவ்வேறாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படும் முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் முயன்று வருகின்றனர்.

“ரமழா வரவிருப்பதோடு, அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான கால அவகாசத்தை பெறும் பொருட்டு ரமழான் காலத்தில் …read more

Source:: Thinakaran தினகரன்