சிட்டி லீக் கால்பந்து அணியினால் இரண்டாவது முறையாக நடத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்ட கால்பந்து தொடரின் காலிறுதிக்கு மாளிகாவத்தை யூத் மற்றும் யங் சில்வர் அணிகள் தகுதி பெற்றன. இந்த அணிகளின் குழுவில் இருந்த கொழும்பு சிட்டி அணி ஒழுக்காற்று காரணத்தால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையிலேயே இந்த இரு அணிகளுக்கும் காலிறுதி வாய்ப்பு கிடைத்தது.
இதன்போது வார இறுதியில் யங் சில்வர் அணியை எதிர்கொண்ட மாளிகாவத்தை யூத் 3–1 என்ற கோல்களால் வெற்றியீட்டியது.
ஜாவா லேன் மற்றும் ரினோன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தண்டனை உதை மூலம் ஜாவா லேன் வெற்றியீட்டியது. இந்தத் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சம்பியனான ஜாவா லேன் உடன் ரினோன் அணியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப சுற்றுக்காக நடந்த மற்றொரு போட்டியில் வெள்ளவத்தை குரே அணிக்கு எதிரான போட்டியில் மொரகஸ்முல்ல அணி 2–0 என வெற்றியீட்டியது. சோன்டர்ஸ் மற்றும் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு இடையிலான போட்டி 1–1 என சமநிலை பெற்றது.
இந்தத் தொடரின் லீக் சுற்றின் கடைசி சில போட்டிகள் அடுத்த வாரம் நடைபெறவிருப்பதால் காலிறுதிக்கு முன்னேறும் மற்ற அணிகள் அடுத்த வாரத்தில் தீர்மானிக்கப்படவுள்ளன.
பிரின்ஸ் குணசேகர
The post யங் சில்வரை வீழ்த்தியது மாளிகாவத்தை யூத அணி appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்