யாழில் விமானப்படையின் கண்காட்சி

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு நெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73,000 புத்தகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 73 பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை வடக்கில் 73,000 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் “தொழினுட்பம் , கல்வி மற்றும் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் கண்காட்சிகள் நடத்தவுள்ளன.

கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில், விமானப் படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.

இந்த கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனையோருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் ஆகும். கண்காட்சிக்கு, 2 இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

ஜெட் விமான இயந்திரம் ஒன்றினையும் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தவுள்ளோம். கண்காட்சியின் முடிவில், அதனை யாழ். பல்கலைகழகத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ளோம் என தெரிவித்தார்.

யாழ். விசேட நிருபர்

The post யாழில் விமானப்படையின் கண்காட்சி appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்