இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் நடத்தப்படும் பகவத்கீதை மகோற்சவம் இம்முறை இலங்கையில் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 2024.03.01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி இம்மகோற்சவம் கொழும்பு 07யிலுள்ள தாமரைத் தாடக மண்டபத்தில் நடத்தப்படவுள்ளது. புத்த சாசன சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில், கலாசார அமைச்சு, இந்து கலாச்சார திணைக்களம், இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியன இணைந்து சர்வதேச கீதை மகோற்சவத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவையொட்டி ரங்கோலி கோலம் போடும் போட்டி, ஓவியம் வரையும் போட்டி, ஆன்மீக உடைப்போட்டி என்பனவும் கலாசார நிகழ்ச்சிகள், மகாபாரத கதாபாத்திரங்களை சித்தரிக்கும் கலை நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா என்பன இடம்பெறவுள்ளன. 2024.03.01ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இந்நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அன்று மாலை 6 மணிக்கு சிறப்பு ஹோமமும் அன்று இரவு 8 மணிக்கு மாபெரும் இசை நிகழ்ச்சியும் இடம்பெறும்.
2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சர்வ மதத் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆய்வாளர்கள் மற்றும் புலமையாளர்கள் கலந்து கொள்ளும் மகாபாரத கருத்தரங்குகள் மும்மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதியுடன் இடம்பெறும். மாலை 5 மணிக்கு அரச உயர் மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர் ஸ்தானிகர், ஆலய அறங்காவலர்கள் உள்ளடங்கலான முக்கிய பிரமுகர்களின் பங்களிப்புடன் பிரதான வைபவம் இடம்பெறும்.
அன்று இரவு ஏழு மணிக்கு வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மாணவிகள் வழங்கும் சிறப்புக் கலை ஆற்றுகை நிகழ்ச்சியும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அன்று இசை நிகழ்ச்சியுடன் இரண்டாம் நாள் நிகழ்வு நிறைவடையும்.
2024.03.03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் கைவினை கண்காட்சி, புத்தகக் கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறும். அன்று மாலை 5 மணி தொடக்கம் யாகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சோபன யாத்திரா இடம்பெறும். சோபன யாத்ராவில் மகாபாரத கதைகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஆற்றுகைகளோடு, கலை நிகழ்ச்சிகள் ஏனைய கண்ணைக் கவரும் கலாசார பண்பாட்டு அம்சங்கள் இடம்பெறும்.
The post “சர்வதேச ஸ்ரீமத் கீதை மகோற்சவம் 2024” appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்