செய்மதி உதிரிப்பாக தயாரிப்புக்கு முதலீடுகளை ஈர்க்க இந்தியா முடிவு

செயற்கைக்கோள் உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதற்காக 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு இடமளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை செய்மதி உதிரிப் பாகங்களின் தயாரிப்பு துறைக்கு ஈரக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இத்திட்டத்தின் கீழ் செய்மதியின் உப துறையானது மூன்று வெவ்வேறு செயற்பாட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு துறையிலும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை வரையறுக்கப்பட்ட வகையில் மேற்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோளை உருவாக்கவும் அரசின் வழித்தடத்தில் அதனை செயற்படுத்தவும் 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய கொள்கை மாற்றத்தின் ஊடாக தன்னியக்க செய்மதி தயாரிப்பு மற்றும் செயற்பாடு, செய்மதி தரவு உற்பத்திகள் என்பவற்றுக்கு 74 சதவீதம் வரை நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக முதலீடு செய்வதற்கு அரசின் அனுமதி பெறப்பட வேண்டும்.

அதேவேளை விண்கலத்தை ஏவுவதற்கும் தரை இறக்குவதற்கும் தேவையான கட்டமைப்புக்களையும் கருவிகள், உபகரணங்களையும் தயாரிப்பதற்கும் விண்வெளி தளங்களை ஸ்தாபிப்பதற்கும் 49 சதவீதம் வரை நேரடி வெளிநாட்டு முதலீட்டை மேற்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.

செய்மதி மற்றும் விண்வெளித் துறைக்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கவும் இத்துறை விரைவாகத் தன்னிறைவு பெறவும் வழிவகுக்கும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post செய்மதி உதிரிப்பாக தயாரிப்புக்கு முதலீடுகளை ஈர்க்க இந்தியா முடிவு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்