ஈழத்து சிறுவர் இலக்கியத்தில் அழியாத்தடம் பதித்த கவிஞர் அம்பியின் குழந்தை பாடல்கள்

ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் நிலைத்திருக்கும். கவிஞர் அம்பியின் 95 ஆவது பிறந்த நாள் பெப்ரவரி 17 இல் கொண்டாடப்பட்டது.

சிறுவர் இலக்கியப் படைப்புகளை தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் மண்ணிலும் படைத்த இலங்கையைச் சேர்ந்த ‘அம்பி’ என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்கள் சிறுவர் இலக்கிய வரலாற்றில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.

‘குழந்தைக் கவிஞன்’ என்றும் ‘ஈழத்தின் தேசிகவிநாயகம்பிள்ளை’ என்றும் போற்றப்படும் கவிஞர் அம்பி ஆக்கிய பாடல்கள் குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பி பெப்ரவரி 17 இல் தனது 94 ஆவது அகவையினுள் தடம்பதித்தார்.

இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் அம்பியின் சொந்த ஊர் இலங்கையில் வடக்கேயுள்ள நாவற்குழி. தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர்கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி உள்ளார்.

ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான கவிஞர் அம்பி அவுஸ்திரேலியாவில் தன் முதுமையிலும் தமிழுக்கு ஆற்றிய பணியை எவரும் மறவர். அம்பி அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு மிகப் பெரிது. தாயகத்திலும், புலம்பெயர் மண்ணிலும் அவர் பெற்ற விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம்.

இளமையில் கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

கவிஞர் அம்பி 1950 ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தற்போது வசிக்கும் கவிஞர் அம்பி சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகள் பலவற்றையும் படைத்துள்ளார்.

‘இலட்சியக் கோடி’ என்ற சிறுகதையின் மூலம் தமிழ் எழுத்துலகில் அறிமுகமானவர். இச்சிறுகதை தினகரன் இதழில் வெளிவந்தது. அத்துடன் தமிழ்நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பெருமைக்கு உரியவர். சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய அம்பியை ஈழத்தின் தேசிகவிநாயகம் பிள்ளையாக சுபமங்களா இதழால் வர்ணிக்கப்பட்டவர்.

சிறுவர் இலக்கிய தமிழ்மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பி அவர்கள் 1968இல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு தங்கப்பதக்க விருதையும் பெற்றுள்ளார். அதன்பின் 1993இல் இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’ம், 1994இல் கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருதும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அவர் அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருதையும், 1998இல் கனடாவில் சி.வை. தாமோதரம்பிள்ளை தங்கப்பதக்க விருதையும் பெற்றுள்ளார். அதன் பின்னர் 2004இல் அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருதையும் பெற்றுள்ளார்.

கவிஞர் அம்பி சிறுவர்களுக்காக எழுதிய இந்த இலக்கியத்தின் கதாநாயகர்களாக, பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து …read more

Source:: Thinakaran தினகரன்