சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கங்காராமை விகாரையின் நவம் மஹா பெரஹராவை நவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பான பெரஹராவாக மாற்ற, பக்தர்களின் ஒற்றுமை உதவியுள்ளது என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராமை விகாரையின் வருடாந்த நவம் பெரஹெராவை நேற்று (23) ஆரம்பித்துவைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு நவம் பெரஹெரா நாற்பத்தைந்தாவது தடவையாகவும் நேற்று (23) இரவு வீதி உலா நடைபெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மங்கள ஹஸ்திராஜயா யானை மீது கரடுவ வைத்து பெரஹெராவை ஆரம்பித்து வைத்தார்.
கங்காராமை விகாரையின் டிஜிட்டல் இணையத்தளமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
நவம் பெரஹெராவிற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க இம்முறை கங்காராமை விகாரை செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
கங்காராமை விகாரையினால் கொழும்பு நவம் பெரஹெராவை நடத்துவது நாற்பத்தைந்தாவது ஆண்டாகும். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவிடம் கங்காராமை பொடி ஹாமதுருவோ (தேரர்)அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பெரஹெரா ஆரம்பிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் அரச அனுசரணையுடம் இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த 45 ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டால், இன்று தொழில்நுட்ப ரீதியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் இணையதளம் மூலம் பெரஹெராவைக் காணவும் வாய்ப்பும் உள்ளது.
இந்தப் பெரஹராவுக்கு ஏராளமான அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களின் உதவி கிடைக்கிறது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பெரஹராவையும், இன்றைய பெரஹராவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்றைய பெரஹராவில் தொழில்நுட்ப முன்னேற்றம் மிக அதிகம். இது பக்தர்களின் பலத்தை காட்டுகிறது. அதிகளவில் வந்துள்ள பக்தர்களால் இந்தப் பெரஹெரா இன்று வண்ணமயமாக மாறியுள்ளது. இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதி தொழிற்சங்க அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பெருந்தொகையான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
The post ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கங்காராமை நவம் மகா பெரஹரா appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்