உலகத் தாய்மொழி தினத்தில் திருச்சியில் தமிழறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு திருச்சி நந்தவனம் அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர்கள் தமிழ் மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர், திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற நிகழ்வுக்கு இனிய நந்தவனம் கெளரவ ஆலோசகர் மேஜர் டோனர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக் சிறப்புரையாற்றினார்.

இவர் பேசும்போது “நமது தாய்மொழியான தமிழ்மீது எப்போதும் பற்றுடன் இருக்க வேண்டும். வருகின்ற தலைமுறையினருக்கு தமிழில் பெயர் வைப்பதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வேற்று மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தாலும் நமது தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டரி கூட்டங்களில் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். ஆனால், தற்போது தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எல்லாக் கூட்டங்களிலும் தமிழில் பேசி வருகிறோம். இதற்கு உறுப்பினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. தாய்மொழியில் பேசும்போது எளிதில் புரிந்து கொள்ள முடிவதால் அனைவரும் வரவேற்கிறார்கள். தமிழ்வழியில் படித்தவர்கள் நிறையபேர் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் நமக்குள் உரையாடும் போதும் தமிழிலேயே பேச வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்வோம்” என்று வலியுறுத்தினார்.

தஞ்சாவூர் யோகம் ரியல் எஸ்டேட் நிறுவனம் இரா. செழியன், திருச்சி நவநீதா பில்டர்ஸ் நிறுவனர் பி. சுரேஷ் நவநீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பேராசிரியர் மீ . சந்திரசேகரன், ரோட்டரி மாவட்டச் செயலாளர் (நிகழ்ச்சி) எஸ்.கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஓ. சுந்தரமூர்த்தி (திருப்பூர்), நன்னிலம் இளங்கோவன், கெளதமன் நீல்ராஜ் (பெரம்பலூர்), கவி. செங்குட்டுவன் (ஊத்தங்கரை), முனைவர் கே.பத்மினி பாலா (தேனி), கவிஞர் பா. ஸ்ரீராம் (திருச்சி), கவிஞர். த.மு. சரவணன் (உதகை), க.கஜேந்திரன் (சென்னை), சுரேஷ் ஆறுமுகம் ( துறையூர்), டேவிட் சத்தியநாதன் (திருவாரூர்), மா பாலசுந்தரம் (மதுரை), கவி. வெண்ணிலவன் (மணமேல்குடி), துஷ்யந்த் சரவணன் (தேவகோட்டை), யா. சாம்ராஜ் ( சிவகங்கை), கவிஞர் மு.கோமதி (திருச்சந்தூர்), நொச்சியம் ச. சண்முகநாதன் (திருச்சி) ஆகியோருக்கு தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டது.

முன்னதாக நந்தவனம் அறக்கட்டளைத் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க, இனிய நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா.தனபால் அனைவருக்கும் நன்றி கூறினார்.

The post உலகத் தாய்மொழி தினத்தில் திருச்சியில் தமிழறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்