கேகாலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காரியாலயம்

கேகாலை மாவட்டத்துக்கு இதுவரை பாரிய குறைபாடாக இருந்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்றை பெற்றுத்தருமாறு முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு மதிப்பளித்து விரைவாக மாவட்ட காரியாலயம் ஒன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (23) உறுதியளித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களின் சேவைகளையும் கிராமத்துக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் கேகாலை நிதகஸ் மாவத்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “இலங்கையை வெற்றிகொள்வோம்” மூன்றாம் கட்ட வேலைத்திட்டத்தின் முதலாவது நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த போது அமைச்சரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

சம்பரகமுவ மாகாணத்தில் அதிகமான மக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள மாவட்டமாக கேகாலை மாவட்டத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்று இல்லாமை பாரிய குறைபாடாகும் என தெரிவித்து, கேகாலை மாவட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் இயக்கத்தினர் அமைச்சருக்கு தங்களது கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று இன்றைய தினம் (23) ஒப்படைத்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் பிள்ளைகளின் கோரி்க்கைக்கு கவனம் செலுத்தி இந்த வருடம் ஆரம்ப 7 தினங்களுக்குள் நுவரெலியா மாவட்டத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு இதன்போது கேகாலை மாவட்ட வெளிநாட்டு தொழிலாளிகளின் இயக்க உறுப்பினர்கள் தங்களது பாராட்டை தெரிவித்திருந்ததுடன் அவ்வாறே தங்களது கோரிக்கைக்கும் விரைவாக பதில் ஒன்று வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்து இருந்தனர்.

முன்வைக்கப்பட்டிருந்த விடயங்களை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய காரியாலயம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அதன் பிரகாரம் இதன்போது உடனடியாக செயற்பட்ட அமைச்சர், காரியாலயம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கினார்.

The post கேகாலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காரியாலயம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்