சமூக ஊடகங்களை தமது குறுகிய சுயஇலாபங்களுக்காக தவறாகப் பயன்படுத்துபவர்கள் திட்டமிட்டு இணையச் சட்டத்தை பூதாகரமானதாக உருவாக்கியுள்ளனர் என ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன்ரத்னபிரிய தெரிவித்தார்.
இணையக் கணக்குகளின் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சமூக ஊடக ஆர்வலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தொழிற்சங்க தொடர்பாடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு கொழும்பு கோட்டையில் உள்ள நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்ைகயில், “இன்று, இந்த நாட்டிற்கான மிக முக்கியமான சட்டம் பற்றிய விவாதத்தையும், கலந்துரையாடலையும் நாங்கள் ஆரம்பிக்கிறோம். இந்த ‘ஒன்லைன்’ காப்பு சட்டம் பற்றி ஒரு பெரிய தவறான கருத்தை உருவாக்கியுள்ளனர். இந்தச் சட்டம் மிகவும் மதிப்புமிக்க சட்டம். இது நாட்டின் அனைவருக்கும் மதிப்புமிக்க ஒன்று. நாடு, ஒழுக்கவிழுமியங்கள், சமூகம் உட்பட அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தி, அதில் குறுகிய இலாபம் ஈட்டியவர்கள் இந்தச் சட்டம் பற்றி தவறாகப் பிரசாரம் செய்தார்கள். இது மிகவும் மோசமான செயலாகும்.
இந்தச் சட்டம் குறித்து நாங்கள் வெளிப்படையாக விவாதித்தோம். அப்படிச் செய்யும்போதுதான் இதன் மதிப்பு புரிகிறது. இன்று, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி யாரையும் அவதூறாகப் பேச முடியாது. இந்தச் சட்டம் இம்மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. நாங்கள் இந்தச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கூறுகிறோம்” என்றார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபர் (சட்டம்,- மாவட்டம்) சட்டத்தரணி ருவன் குணசேகர உரையாற்றுகையில், “நிகழ்நிலை காப்புச் சட்டம் சமூகத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தவில்லை. இன்று நடைபெற்ற மாநாட்டின் மூலம் அதை உணர்ந்தோம். சமூக ஊடக வலைப்பின்னல்களை தவறாகப் பயன்படுத்துவதால் சமூகத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதனால் சமுதாயம் பலம் பெற்றுள்ளது.இந்தச் சட்டத்தின் பிரிவு 10 முதல் பிரிவு 22 வரை குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் பலமாகும்” என்று குறிப்பிட்டார்.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆலோசகர், இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர், மூத்த இணையதள தேர்வுமுறை பொறியியலாளர் புலஸ்தி வன்னியாராச்சி பேசுகையில், “கம்ப்யூட்டர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான விடயங்களால் ஆண்டுக்கு 10,000 முதல் 12,000 புகார்கள் வந்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டில், எங்களுக்கு 20,000 இற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடந்த அநீதிகள். இவற்றை எதிர்த்துப் போராட சட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம்” என்றார்.
மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சமூக வலைதள ஆர்வலர்கள் கேட்ட கேள்விகளுக்கும் நிபுணர்கள் குழு பதில் அளித்தது.
The post சமூக ஊடகத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களே நிகழ்நிலைகாப்பு சட்டத்தை பூதாகரமாக்கியுள்ளனர் appeared first …read more
Source:: Thinakaran தினகரன்