அக்கரைப்பற்று பிரதேச மக்களின் நீண்டகாலக் குறையைத் தீர்த்து வைக்கும் பொருட்டு அங்கு சகல வசதிகளையும் கொண்ட சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத கிளினிக் மற்றும் மருந்தக நிலையமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிலையத்தின் பொறுப்பதிகாரியும் உளவளத் துணையாளருமான ெடாக்டர் எம்.எச் ரிப்னாஸ் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
டொக்டர் ரிப்னாஸ் சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக் கல்வியையும், மருத்துவ தொழில்சார் வைத்திய பயிற்சிகளையும் இந்தியா சத்ரபதி சாஹுஜி மகராஜ் கல்லூரியில் பெற்றார். அதனோடு உளவளக் கல்விலும் பாண்டித்தியம் பெற்றார். தான் பெற்ற கல்வியால் மக்கள் பயனடைய வேண்டும் என அவர் எண்ணினார். குறைந்த பட்சம் தனது ஊர் மக்களாவது பயன்பெறவேண்டுமென விரும்பினார். இதன் விளைவாகவே இந்த வைத்தியசாலை உருவானது. அவரது சிந்தனையில் உருவான இக்கட்டடத்தை அவரே முன்னின்று நிர்மாணித்தார்.
வைத்தியர் அறை, நோயாளர் அறை, களஞ்சிய அறை மற்றும் அவற்றைத் தயாரிப்பதற்கான தளபாடங்களை உள்ளடக்கிய பொறிமுறை அமைப்புகள் போன்றவற்றையும் இவரே அமைத்தார். தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா எம்.பி தனக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிக் கொண்டிருந்தமை தனக்கு மிகுத்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.
ெடாக்டர் ரிப்னாஸ் விடுத்த அழைப்புக்கு அமைவாக அதாஉல்லா எம்.பியே இந்நிலையத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் வை. ராசித், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.எம்.தமீம் மற்றும் வைத்தியஜோதி வித்தகர் மருத்துவர் ஆர். ஸ்ரீ கிருஷ்ணன், ஆயுர்வேத வைத்தியர்களான எம். சீ.எம். காலித், எஸ்.எ. சித்தி சாமிளா, எம். எ.எம் நஹீம், இப்பகுதிகளில் பணிபுரியும் ஆயுர்வேத வைத்தியர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா, “சித்த மருத்துவம் மிகவும் பைழமைவாய்ந்த எமது பண்டைய மருத்துவ முறையாகும். எவ்வித பக்கவிளைவுகளோ பாதிப்புகளோ இல்லாத இவ்வைத்தியத்தில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது. ஆங்கில வைத்தியத்திலும் சிகிச்சை முறைகளிலும் எமது மக்கள் மிகவும் கவரப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் எம்மக்கள் இவ்வைத்தியத்துறைக்கு புத்துயிரூட்ட முன்வந்தமை ஒரு நல்ல விடயமாகும். இது விடயத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த, ஆயுர்வேத வைத்தியத்துறைக்கு அருந்தொண்டாற்றியவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா நினைவுச்சின்னங்கள் வழங்கினார். வழங்கப்பட்டன. வைபவ இறுதியில் நிலையத்தின் பொறுப்பாளர் ெடாக்டர் ரிப்னாஸ் அதாஉல்லா எம்.பிக்கு நினைவுச்சின்னம் வழங்கினார்.
கலாபூசணம் எம்.எ.பகுர்தீன்…
(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)
The post அக்கரைப்பற்றில் சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத கிளினிக், மருந்தக நிலையம் திறந்துவைப்பு appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்