அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு 07, விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடத்தவுள்ளது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இவ் ஒன்றியம் நாடு முழுவதிலும் உள்ள அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே மாவட்ட ரீதியில் நடத்திய ஆடற்கலைப் போட்டியில் வெற்றி பெற்ற அறநெறிப் பாடசாலைகள் இந்த இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள 13 அறநெறிப் பாடசாலைப் பாடசாலைகள் இந்த இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.
இந்த இறுதிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெறும் அறநெறிப் பாடசாலைக்கு ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அறநெறிப் பாடசாலைக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும். மூன்றாம் இடத்தைப் பெறும் அறநெறிப் பாடசாலைக்கு முப்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும். மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட போட்டியிலிருந்து இறுதிப் போட்டி வரை பங்குபற்றிய அனைத்து அறநெறிப் பாடசாலை மாணவ மாணவிகளும் நடனம் கற்பித்த அறநெறிப் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த ஆடற்கலைப் போட்டியில், “நம்ம தமிழ் பசங்க” என்ற விருது ஒன்றும் வழங்கப்படவிருக்கிறது. மலையகம் 200ல் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் சிலர் இணைந்து “மலையகத்தின் 200” வருட கால வரலாற்றை மையமாக வைத்து பாடலொன்றை இயற்றி, ஒலி, ஔிப்பதிவு செய்து வௌியிட்டுள்ளனர். இந்திய திரைப்படப் பாடலுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடல் வைரலாகி வருகிறது. இதில் புதிய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். “பொழப்பு தேடி” என்ற தலைப்பில் இந்தப் பாடல் வௌியிடப்பட்டுள்ளது. இவர்களது இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து “நம்ம தமிழ் பசங்க” என்ற விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post “பொழப்பு தேடி” பாடலை வெளியிட்ட கலைஞர்களுக்கு ஆடற்கலைப் போட்டியில் “நம்ம தமிழ் பசங்க” விருது appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்