கிண்ணியா தள வைத்தியசாலைக்கான காணியை, கிண்ணியா பிரதேச செயலாளர் M.H.M. கனி, பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் V. பிரேமநாத்திடம் இன்று (27) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
கிண்ணியா தள வைத்தியசாலையின் அமைவிடம் சனநெருக்கடி நிறைந்த இடத்தில் அமைந்திருப்பதாலும் கிண்ணியா மக்களின் சனத்தொகைக்கேற்ப விசாலமான ஓர் இடமாக அது அமையாததாலும் மக்கள் நலனை கருத்திற்கொண்டு அதனை விஷ்தரிப்பு மேற்கொள்வதற்கு தற்போதைய அமைவிடத்தில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாலும் கிண்ணியா தள வைத்தியசாலை பொருத்தமான இடத்தில் அமைய வேண்டுமென்ற கோரிக்கை பொதுமக்களாலும் சமூக நலன் விரும்பிகளாலும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
மிக நீண்ட முன்னெடுப்புகளுக்குப் பின்னர் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்தியர் A. M. ஜிப்ரி மற்றும் அவரது குழாமின் அயராத உழைப்பில் கிண்ணியா தள வைத்தியசாலைக்கான பொருத்தமான இடம் இனம் காணப்பட்டு அக்காணி உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிண்ணியா வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவர் வைத்தியர்AM ஜிப்ரி, கிண்ணியா பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் கால்தீன், கிண்ணியா தள வைத்தியசாலை சிரேஷ்ட தாதி உத்தியோகத்தரும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு செயலாளருமான எம்.எம்.எம். நௌஷாத் ஆகியோருடன் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
கிண்ணியா மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அயராது உழைத்தமைக்கு சிறந்த வெற்றி கிட்டியதாகவும் பல சவால்களுக்கு மத்தியிலேயே இவ்வெற்றியை அடைந்ததாக தாதி உத்தியோகத்தரும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு செயலாளருமான எம்.எம்.எம். நௌஷாத் தெரிவித்தார்.
இர்ஷாத் இமாமுதீன்
கிண்ணியா தினகரன் நிருபர்
The post கிண்ணியா தள வைத்தியசாலைக்கான காணி கையளிப்பு! appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்