மருதமுனை ஊடகவியலாளர் முகம்மட் ஜெஸீல் மீதான தாக்குதலுக்கு பலதரப்பினரும் கண்டனம்!

உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தல்!

தினகரன் பத்திரிகையின் அம்பாறை செய்தியாளரும், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் ஊடகத்துறையில் சுறுசுறுப்புடன் செயற்பட்டு வருபவருமான முகம்மட் ஜெஸீல் இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பலதரப்புகளிலுமிருந்து வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

பல்வேறு இலத்திரனியல் ஊடகங்கள் இச்சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சமூகவலைத்தளங்களிலும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படுவதுடன், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருதமுனையின் 65 மீற்றர் வீட்டுத்திட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் முகம்மட் ஜெஸீல் கடந்த 22 ஆம் திகதி அங்கு வந்து சேர்ந்த காடையர் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இரும்புக் கம்பி, தலைக்கவசம், கற்கள் போன்றவற்றால் அவர் தாக்கப்பட்டுள்ளார். அக்கும்பல் அவரைத் தாக்கியதுடன் எச்சரிக்ைகயும் விடுத்து விட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் முகம்மட் ஜெஸீல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட 65 மீற்றர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள 168 வீடுகளின் ஒரு பகுதியான 108 வீடுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய வீடுகள் அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவ்வீடுகள் கையளிப்பு தொடர்பாக பொதுமக்களால் தெரிவிக்கப்படும் மனக்குறைகளை ஆராய்ந்து செய்தி எழுதுவதற்காக ஊடகவியலாளர் முகம்மட் ஜெஸீல் அங்கு சென்றிருந்த வேளையில், அவ்விடத்துக்கு திட்டமிட்டவாறு வந்து சேர்ந்த கும்பலொன்று ஊடகவியலாளரைத் தாக்கியுள்ளது.

அவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

மருதமுனை 65மீற்றர் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் மீதான தாக்குதலானது கருத்துச் சுதந்திரத்துக்கும் ஊடகத்துறைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post மருதமுனை ஊடகவியலாளர் முகம்மட் ஜெஸீல் மீதான தாக்குதலுக்கு பலதரப்பினரும் கண்டனம்! appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்