பண்டாரவளை புகையிரத நிலையத்தில் உல்லாசப் பயணிகள் ஓய்வு அறை திறப்பு

பண்டாரவளை ரயில் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் ஓய்வு அறை, உணவகம் உள்ளிட்ட புதிய கட்டடத் தொகுதியை அமைச்சர் பந்துலகுணவர்தன அண்மையில் திறந்து வைத்தார். மிகக் கவர்ச்சியான இந்த ரயில் நிலையம் 1983 இல் நிறுவப்பட்டது. இதை வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலர் பயன்படுத்துகின்றனர். இதனால், இதன் வசதிகளை மேலும் அதிகரிக்க இப்புதிய கட்டடம் திறக்கப்பட்டது. இங்கு பேசிய அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்ததாவது;

பண்டாரவளை ரயில் நிலையத்தை அடிப்படையாக கொண்டு இப்பிரதேசத்திற்கு மேலும் பல பெருமைகளை பெற்றுக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மலையக ரயில்வேயை அடிப்படையாக கொண்ட இந்தப் பிரதேசம் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இதன்மூலம், நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஊடாக அதிக டொலர்கள் வருமானமாக கிடைக்கிறது. அத்துடன், அப்பகுதியின் உற்பத்திகளுக்கு அதிக தேவை மற்றும் முதலீடுகளும் கிடைக்கும். மேலும் ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்நிலையம் பெரிதும் உதவும்.

இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு உயர்தர வசதிகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்க முடியும். சுற்றுலாத் தலங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய ரயில்வே துறையின் நிதி நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நான், இந்த அமைச்சின் பொறுப்பை ஏற்கும்போது ரயில்வே திணைக்களத்தின் வருமானம் 2.6 பில்லியனாக இருந்தது. அதில் 2.3 பில்லியன் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டது. ரயில்வே துறைக்கு பத்து பில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. திணைக்களத்தில் உள்ள அனைவரின் பங்களிப்புடன் நாங்கள் நடைமுறைப்படுத்திய புதிய திட்டத்தின் மூலம் வருமானத்தை 13 பில்லியனாக உயர்த்தியுள்ளோம். ஆண்டுக்கான செலவு 36 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குவதற்கு, உள்ளூர் தனியார் துறையுடன் அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து இந்த சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

The post பண்டாரவளை புகையிரத நிலையத்தில் உல்லாசப் பயணிகள் ஓய்வு அறை திறப்பு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்