இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3–1 என கைப்பற்றியது.
ரான்சியில் நடைபெற்ற இந்த டெஸ்டின் நான்காவது நாளான நேற்று (26) 192 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து அந்த இலக்கை எட்டியது. சுப்மன் கில் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை பெற்றார்.
முன்னதாக இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் (122) சதத்தின் உதவியோடு 353 ஓட்டங்களை பெற்றதோடு இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 307 ஓட்டங்களை சேர்த்தது.
எனினும் இரண்டாவது இன்னிஸில் தடுமாற்றம் கண்ட இங்கிலாந்து அணி 145 ஓட்டங்களுக்கே சுருண்டது. அஷ்வின் ஐந்து விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியபோதும் அடுத்து மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றி பெற்றே தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகவுள்ளது.
The post இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்டிலும் இந்தியாவுக்கு வெற்றி தொடரையும் கைப்பற்றியது appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்