இந்தியாவில் சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இன்றி சுமார் 70 கிலோமீற்றர் பயணித்தது தொடர்பில் அந்நாட்டு ரயில்வே திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கடும் வேகத்தில் ரயில் வண்டி பல ரயில் நிலையங்களை கடந்து செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் பதிவாகியுள்ளன. இந்த ரயில் கடந்த ஞாயிறன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவாவில் இருந்து பஞ்சாபின் ஹஷியபுர் மாவட்டம் வரை ஓட்டுநர் ஒருவர் இல்லாமல் பயணித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜலந்தரைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி அஷோக் குமார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ரயில் பயணிக்கும் மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில் கடவைகளும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது என்றார்.
இந்த ரயில் நிறுத்தப்பட்டதாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ரயில்வே கூறியது. ரயிலில் இருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இறங்கிய நிலையில் சாய்வொன்றில் நகர்ந்திருக்கும் இந்த ரயில் மணிக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் ஐந்து ரயில் நிலையங்களைத் தாண்டி பயணித்த நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து வேகத்தை கட்டுப்படுத்தியே ரயில் நிறுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
The post ஓட்டுநர் இன்றி 70 கி.மீ. பயணித்த சரக்கு ரயில் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்