போட்டியிடுவோரில் தகுதியானவரை மக்கள் அறிவர்
ஒக்டோபரில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் விரிவான கூட்டணி அமைக்க உள்ளதாகவும் அக்கூட்டணியில்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவாரென்றும் ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (25) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர், இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றித் தெரிவித்த அவர்: நாடு தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், நாட்டை மீட்பதற்குத் தனி ஒரு கட்சியால் முடியாது. அனைவரின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்ய முடியுமான அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து விரவான கூட்டணியை அமைக்க உள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அந்த கூட்டணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார்.
நாடு வங்குராேத்து அடைந்திருந்த நிலையில் நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. விழுந்திருந்த நாட்டை கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்கிறார்.இதனால்தான், நாட்டை பொறுப்பேற்க பலரும் முன்வரத் தயாராகின்றனர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்க 15 பேர் வரை உள்ளனர். இவர்களில் எவரால்,நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அரச அதிகாரிகள் இதனைவிட பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவர்களின் அன்றாட கடமைகளை இழுத்தடிப்பு செய்யாமல் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள முன்வரவேண்டும்.
மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியே பொறுப்பாகும். இதனை நான், ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாட்டின் நிதி முகாமைத்துவம் இருப்பது மத்திய வங்கியிடமே. அவர்கள் ஏனைய துறையினருக்கு விரல் நீட்டுகிறார்களே தவிர அவர்களின் பொறுப்பை செய்ய தவறிவிட்டனர் . இந்நிலையில் மத்திய வங்கி அதிகாரிகள் தங்களின் சம்பளத்தை பாரியளவில் அதிகரித்துள்ளனர். இது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்றார்.
The post கட்சி சார்பற்ற வேட்பாளராக ஜனாதிபதி களமிறங்குவார் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்