மக்களுக்காக இறைவனிடம் உறுதியாக பரிந்துரைக்கும் அற்புதர் புனித அந்தோனியார்

கச்சத்தீவு திருவிழா மறையுரையில் குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்

புனிதர்கள் மத்தியில் மிகவும் வல்லமையுள்ள புனிதராகவும் பெருமளவு மக்களின் நம்பிக்கைக்குரிய புனிதராகவும் புனித அந்தோனியார் திகழ்கின்றார் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் பேரருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்

இறைவனிடம் நமக்காக பரிந்து பேசி தம்மிடம் வேண்டுதல்களை முன்வைக்கும் மக்களின் தேவைகளை கண்டிப்பாக பெற்றுக் கொடுப்பவராக புனித அந்தோனியார் திகழ்கின்றார். அதனால்தான் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் மக்கள் கச்சத்தீவுக்கு வந்து தாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு புனித அந்தோனியாருக்கு நன்றி தெரிவித்து வேண்டுதல் செய்வதையே நாம் அதிகமாகக் காண முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா கடந்த சனிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த திருவிழா திருப்பலி மறையுரையின் போதே குரு முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் மறையுரையாற்றிய அவர், புனித அந்தோனியாரை பொன்னான புனிதர் என அனைவரும் அழைப்பர். மற்றும் பலர் எமக்கு புனித அந்தோனியார் என்றாலே பயம் எனத் தெரிவிப்பர்.

உண்மையில் மக்களின் இந்த அறிக்கையின் உண்மைத் தன்மை பொல்லாத புனிதர் என்பதல்ல. அவர் மக்களுக்கல்ல ஆண்டவருக்கே பொல்லாதவர்.

இறைவனே அந்தோனியாருக்கு பயப்படுவார். தன்னுடைய பக்தர்களின் தேவைகளுக்காக இறைவனைப் பார்த்து அவர் பரிந்து பேசுவார் என்பதை விட மக்களுக்காக அவர் இறைவனிடம் அடம்பிடிப்பார் என்பதே சரியானதாகும்.

என்னுடைய மக்கள் என்னிடம் இத்தகையை மன்றாட்டுக்களை முன்வைக்கின்றனர். நீங்கள் அதனை நிறைவேற்றியே ஆகவேண்டும் என அவர் இறைவனிடம் மக்களுக்காக அடம்பிடிப்பார்.

அதற்காகவே அந்தோனியார் என்றால் இறைவனுக்கு ஒரு பயமுண்டு. மற்ற புனிதர்களை விட இவர் கேட்டால் இறைவன் உடனடியாகவே அவருக்கு வழங்கிவிடுவார்.

அவ்வாறு இறைவன் செய்யாவிட்டால் அவர் இறைவனை நிம்மதியாகவே இருக்க விடமாட்டார். அந்த வகையில் அந்தோனியார் நாம் பயப்படக்கூடிய ஒரு புனிதரல்ல. அவர் எம்மை பராமரித்து எமக்காக இறைவனிடம் பரிந்துபேசி வேண்டும் வரங்களை பெற்றுத் தருபவர். அதனால் அவருக்கு பயப்படாமல் நம்பிக்கையோடு அவரிடம் கேட்டால், மனருதுக செபித்தால் அது நமக்கு கிடைப்பது உறுதி. கச்சத்தீவில் பல்லாயிரக்கணக்கானமக்கள் கூடுவதற்கு காரணமும் அதுவே, கடந்த காலங்களில் நாம் கேட்ட பலவற்றைப் பெற்றுத் தந்துள்ளார். இம்முறை திருவிழாவில் அனேகமான நேர்த்திக் கடன்கள் கடந்த வருடத்தில் தான் கேட்டு பெற்றுக் கொண்டதற்காக மக்கள் முன்வைத்ததையே ஆலய அறிவித்தலில் எம்மால் கேட்ட முடிந்தது. அவரிடம் கேட்பதை விட கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தவர்களே அதிகம்.

எஸ். செல்வா…

The post மக்களுக்காக இறைவனிடம் உறுதியாக பரிந்துரைக்கும் அற்புதர் புனித அந்தோனியார் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்