திருஞானசம்பந்தப்பிள்ளையார், மற்றைநாள் பிராதக் காலத்திலே, ஆலயத்திற்சென்று, தம்முடைய பிதாமாதாக்களாகிய பரமசிவனையும் பார்வதியாரையும் வணங்கித் துதித்து, அருள்பெற்று, திருக்கோலக்கா வென்னுந் திருப்பதியை அடைந்து, திருக்கோயிலை வலஞ்செய்து முன்னின்று, கையினாலே ஒத்தறுத்துத் திருப்பதிகம் பாடத் தொடங்கினார். பாடும்பொழுது, சிவபெருமானுடைய திருவருளினாலே ஸ்ரீ பஞ்சாக்ஷரம் எழுதப்பட்டிருக்கின்ற பொற்றாளம் உலகமெல்லாம் உய்யும்படி பிள்ளையாருடைய திருக்கரத்தே வந்திருந்தது;. பிள்ளையார் அதைக் கண்டு, திருவருளை வியந்து, களி கூர்ந்து, ஏழிசையும் தழைத்தோங்க, திருப்பதிகத்தைப் பாடிமுடித்து, திருக்கடைக் காப்புச் சாத்தி நின்றார். அவர் பாடும் பொழுது, விண்ணுலகமும் அதிசயிக்கும்படி ஓங்கிய அதிமதுரநாதத்தை நோக்கித் தும்புரு நாரதர் முதலாகிய சங்கீதவித்துவான்கள் ஸ்தோத்திரஞ்செய்து, புஷ்பமாரி பொழிந்தார்கள். வேதசிவாகமங்கள் வாழும்படி திருவவதாரஞ் செய்தருளிய பிள்ளையார் மீண்டு சீர்காழிக்குப் போம்படி நடந்தார். நடக்கும் பொழுது, சிவபாதவிருதயர் தரிக்கலாற்றாமையால் தோளின் மேலே தரித்துக் கொள்ள, பிள்ளையார் அத்தோளின்மேல் எழுந்தருளி, சீர்காழியிலிருக்கின்ற திருக்கோயிலை அடைந்து, வலஞ்செய்து, சந்நிதானத்திலே நின்று திருப்பதிகம் பாடி வணங்கிக் கொண்டு, தம்முடைய திருமாளிகையை அடைந்து, அந்தச் சீர்காழியில் வாழுகின்றவர்களெல்லாரும் வாழும் பொருட்டு, தம்முடைய இளந்திருக்கோலக் காட்சியைக் கொடுத்து வீற்றிருந்தருளினார். அப்படியிருக்கும் பொழுது, அவருடைய தாயாராகிய பகவதியார் பிறந்த திருநனிப்பள்ளியில் இருக்கின்ற பிராமணர்கள் எல்லாரும் பெருமகிழ்ச்சியோடு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து, அவரை வணங்கப் பெற்று இருந்தார்கள். பிள்ளையார் உலகமெல்லாம் உய்யும்படி சிவஞானம்பெற்ற பெருவார்த்தையைக் கேள்வியுற்று, சமீப ஸ்தலங்களிலிருக்கின்ற பிராமணர்களும் திருத் தொண்டர்களும் மற்றையனைவரும் அதிசயித்துத் திரண்டு வந்து, பிள்ளையாரை வணங்கி உய்ந்தார்கள். (தொடரும்)
The post மானுடவியல் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்